November 09, 2009

நெட் பைத்தியமா? சிகிச்சை தேவை


பலரும் கணினி முன் அமர்ந்தால் உலகமே மறந்து போய்விடுகிறது என்று மகிழ்ச்சியாகக் கூறும் காலம் போய், கணினி முன் அமர்ந்து உலகத்தையே மறந்துவிட்டவர்கள் அதிகரித்து வரும் காலம் இது.

இந்த நெட் பைத்தியங்களால் பணம் சம்பாதிப்பது நெட் சென்டர்கள் மட்டுமல்ல, நெட் பைத்தியங்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்று அமெரிக்காவில் ஒரு மையம் ஆரம்பித்துவிட்டது வியாபாரத்தை.

இணையம் பற்றி வகுப்பு எடுத்து சம்பாதித்தவர்களுக்கு இப்போது வேலை இல்லை. அந்த நிலை மாறி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.

எப்போதும் இணையத்தில் எதையாவது செய்து கொண்டு கணினி முன் சிலையாகக் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

இதுபோன்றவர்களுக்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த சிகிச்சைக்கு பெயர் என்னத் தெரியுமா? ரீ-ஸ்டார்ட் என்பதுதான். கணினியால் ஹேங்க் ஆகிப் போனவர்களுக்கு ரீ-ஸ்டார்ட் என்ற இந்த சிகிச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.

இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மருத்துவர் லாரி கேஷ் கூறுகையில், இணையம் துவங்கியப் பிறகு பல்வேறு பிரச்சினைகளும் துவங்கிவிட்டன. சமூக மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன. இதில் இணையத்தை ஒரு வரைமுறையில் வைத்திருப்பவர்கள் மட்டுமே தப்பிக்கின்றனர். அப்படி தப்பிக்க முடியாதவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், வீடியோ/கணினி விளையாட்டுகளில் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடைப் பயிற்சி, கலந்தாய்வு என பல கட்ட சிகிச்சைகள் உண்டு. இதற்கென உள்ள சிகிச்சை நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனியாக கவனிக்கிறார்கள்.

ஆனால் நெட் பைத்தியம் பிடித்தவர்களுக்கு முழுப் பைத்தியம் ஆகிவிடும், இதற்கான கட்டணத்தைக் கேட்டால். ஆம்.. ஒன்றரை மாதத்திற்கு அதாவது 45 நாட்களுக்கு ரூ.6.75 லட்சமாம்.

அம்மாடியோவ்...

இந்த கட்டணத்தைக் கேட்ட பிறகு தலை லேசாக சுற்றும். எனவே நீங்களாகவே நெட்டில் இருந்து ஓரளவிற்கு விலகிக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக எங்கள் இணைய தளத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டாம். அதைப் பார்த்தால்தானே இப்படியெல்லாம் பிரச்சினை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிய வரும். என்ன நான் சொல்வது?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review