November 09, 2009

மென்மையான சருமம் வேணுமா?


நம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.

வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

மென்மையான சருமத்தை கண்டறிவது:

* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல். * மாய்ச்சரைசர்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாதல். * சூரிய வெப்பத்தால், எளிதில் பாதிப்பிற்கு ஆளாதல். * வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டினாலும் விரைவாக பாதிக்கப்படுதல்.

மேற்கூறிய இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவை மிக மென்மையான சருமத்தினரை குறிக்கிறது.

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்:

மிக மென்மையான சருமத்தினர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

முகத்திற்கு செய்யப்படும் ஆவி பிடித்தல், கரும்புள்ளிகளை நீக்குதல் போன்றவை மென்மையான சருமத்திற்கு எரிச்சல் ஊட்டுபவை. எனவே, இவ்வாறான அழகு சிகிச்சைகள் செய்யப்படுவதற்கு முன், சரும நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.
உகந்த அழகு சாதனப் பொருட்கள்:

* எப்போதும் பவுடர் மேக்-அப் பயன்படுத்துவதே நல்லது. திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு நல்லது. * பழைய அழகு சாதனப் பொருட்கள் குறிப்பாக, கண்களுக்கான அழகு பொருட்களில், வாங்கி சிறிது நாட்கள் ஆனதை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காரா மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். பவுடர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேலும், மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும். * கறுப்பு ஐ லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்தவது நல்லது. ஏனென்றால் அவை அதிகளவில் அலர்ஜியை தோற்றுவிக்காது. * பென்சில் ஐ லைனர் மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப் படுகிறது. இதனால், பென்சில் ஐ லைனர் பயன் படுத்துவது நல்லது. திரவ ஐ லைனரில், சேர்க்கப் படும் லேட்டக்ஸ் மென்மையான சருமத்தினர் சிலருக்கு ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம். * அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே நல்லது. *எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னும், சோதனை செய்து கொள்ள வேண்டும். * மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review