January 02, 2010

ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்த பரிந்துரை

ரத்த உறைவை தடுக்கவும், ரத்த ஓட்டத்தை சீரமைக்கவும் உதவும் ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் உள்ள ரோவெட் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஆசிம் தத்தா ராய் இது குறித்து குறிப்பிடுகையில்,"வயதானவர்கள் தங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கொள்ள, தினமும் சிறிதளவு ஆஸ்பிரின் மருந்தை உட் கொண்டு வருகின்றனர்.


தொடர்ச்சியாக இந்த மருந்தை உட்கொள்வதால், வயிற்றில் புண் ஏற்பட்டு விடுகிறது. இதனால், சிலருக்கு வயிற்றில் ரத்தக் கசிவும் காணப்படுகிறது. நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியின் விதையில் உள்ள நிறம் மற்றும் வாசனையற்ற பிசுபிசுப்பான பொருள், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தம் உறைவதையும் தடுக்கிறது. எனவே, ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம்' என்றார்.

இந்த கண்டு பிடிப்பை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில், தக்காளியின் இந்த பகுதியை தனியாக எடுத்து, பசை வடிவில் தயாரித்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தக்காளியின் இந்த பசை பகுதி சில பானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்

இன்டர்நெட் உலா வர உதவிடும் பிரவுசர்களில் முதலில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்த பிரவுசர் நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் என்னும் இன்டர்நெட் பிரவுசராகும்.

ஆனால் 1990 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் நெட்ஸ்கேப் இருந்த இடத்தை எடுத்துக் கொண்டது. அதன்பின் வந்த பிரவுசர்களினால் நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையை விட்டே ஏறத்தாழ காணமல் போன அளவிற்கு மறைந்தது.

நெட்ஸ்கேப் நிறுவனத்தை உண்டாக்கிய மார்க் ஆண்ட்ரிசன் தற்போது புதிய பிரவுசர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், புதிய நிறுவனமான ராக்மெல்ட் (RockMelt) என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறார்.

மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை எதிர்த்து பயர்பாக்ஸ் பெற்று வரும் வெற்றியே புதிய முயற்சிக்குக் காரணம் என்று இந்த துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ராக்மெல்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய பிரவுசர் முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் புதியதொரு அனுபவத்தினை அளிக்கும் என்று ஆண்ட்ரீசன் குறிப்பிட்டுள்ளார்.

இன்டர்நெட் தளங்கள் வேகமாக வளர்ந்த அளவிற்கு அவற்றிற்கான பிரவுசர் வளர்ந்து, மக்களுக்கு உதவவில்லை என்றும், புதியதாக உருவாகும் பிரவுசர் இந்த குறையினைத் தீர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

மெல்லிய லேப்-டாப் : ஆப்பிளின் புதிய திட்டம்

சந்தையில் தற்போதுள்ள லேப்-டாப்களை விட மெல்லிய, எடைகுறைந்த நவீன லேப்-டாப் கணினியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.


இந்த மடிக்கணினியில் ஹார்ட்-டிஸ்க் பகுதிக்கு பதிலாக, ஆப்பிள் ஐ-போன்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் எடை மற்றும் தடிமன் பாதியாக குறையும் என கணினி தயாரிப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மடிக்கணினி விற்பனையில் அதிக ஆர்வமும், தீவிரமும் காட்டி வரும் ஆப்பிள் நிறுவனம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் 1.34 மில்லியன் மடிக்கணினிகளை விற்பனை செய்துள்ளது.

இது கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மடிக் கணினிகளின் எண்ணிக்கையை விட 37 சதவீதம் அதிகம் என ஆப்பிள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review