
நீர்மூழ்கிக் கப்பல்கள் மனிதனின் கடற்பயண வரலாற்றில் இன்னொரு மைற்கல். பறவையைக் கண்டு விமானம் படைத்து, பறந்து, பாயும் மீன்களில் படகினைக் கண்டு தண்ணீரின் மேலாகப் பயணித்த மனிதனின் ஆசை அத்துடன் நின்றுவிடவில்லை.
அவன் தண்ணீருக்கு அடியாலும் பயணிக்க ஆசைப்பட்டான். ஆசை என்பதைவிட தண்ணீரின் அடியாற் பயணிக்கவேண்டிய தேவை அவனுக்கு எழுந்தது. ஆம், போர் மனிதனுக்கு அந்தத் தேவையை உருவாக்கியது.
போர்களின்போது எதிரிகளை நெருங்கிச்சென்று தாக்குவதற்கோ எதிரிகள் அறியாது பயணிப்பதற்கோ தேவையான வழிமுறைகள் பற்றிய தேடலின் விளைவே நீர்மூழ்கிக் கப்பல்கள்.
1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால் பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாறு இக்கலத்திலிருந்தே தொடங்குகின்றது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நீர்மூழ்கிகள் பரந்துபட்டளவில்...