November 27, 2009

“கேன்சர்” நோயை பரப்பும் “மார்பின்” மாத்திரை: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கேன்சர் நோயினால் (புற்று நோய்) பாதித்தவர்களுக்கு வலியை போக்குவதற்காக “மார்பின்” மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாத்திரை புற்று நோயை மேலும் பரவ செய்யும் தன்மை உடையது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தநாளங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக மற்ற செல்களிலும் புற்று நோயை பரவ செய்வது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. பாஸ்டனில் உள்ள அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர் பேட்ரிக் சிங்கிள்டன் தெரிவித்தார்.

மார்பினுக்கு பதிலாக மெத்தில் நால்ட்ரோசன் அல்லது எம்.என்.டி.எக்ஸ். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

2014இல் புதிய அணு உலை அறிமுகம்: இரஷ்யா


2014ஆம் ஆண்டிற்குள் அடுத்தத் தலைமுறை அணு உலையையும், புதிய வகை அணு எரி பொருளையும் இரஷ்யா அறிமுகப்படுத்தும் என்று அந்நாட்டு அதிபர் திமித்ரி மெட்விடேவ் கூறியுள்ளார்.

இரஷ்ய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரஷ்யா நாட்டின் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்துப் பேசிய இரஷ்ய அதிபர் திமித்ரி மெட்விடேவ், “தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அணு சக்தி பொறியியல் மேம்பாட்டைத் தனியாக மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை அணு உலையும், புதிய வகை அணு எரிபொருளும் உருவாக்கப்படும். 2014ஆம் ஆண்டிற்குள் உருவாக்கப்படும் இவ்விரண்டு தொழில்நுட்பங்களுக்கு உள்நாட்டிலும் அயல் நாடுகளிலும் பெரிதும் வரவேற்பு இருக்கும்” என்று கூறியுள்ளார்.


புதிய அணு உலை தொழில்நுட்பத்தை உருவாக்கினாலும், இந்தியா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகள் சேர்ந்து உருவாக்கும் ஈட்டர் என்றழைக்கப்படும் பன்னாட்டு அனல் அணு உலைத் தயாரிப்பில் இரஷ்யாவும் ஈடுபடும் என்றும், இரஷ்யா உருவாக்கவுள்ள புதிய அணுத் தொழில்நுட்பம் மருத்துவ மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் என்றும் மெட்விடேவ் கூறியுள்ளார்.

இரஷ்யாவின் அணு மின் உலை தயாரிப்பு நிறுவனமான டிவிஇஎல் உலகம் முழுவதிலும் இயங்கும் அணு உலைகளில் 17 விழுக்காடு தயாரித்து வழங்கிய பெரும் நிறுவனமாகும். இந்நிறுவனம் டிவிஎஸ்-கிவாட்ரட் எனும் புதிய அணு எரிபொருளை உருவாக்கி வருகிறது. இது மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திவரும் அணு உலைகளில் பயன்படுத்தக் கூடிய எரிபொருளாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இரஷ்ய அதிபர் திமித்ரி மெட்விடேவ் கூறுவது அந்நாடு உருவாக்கிவரும் ஃபாஸ்ட் நியூட்ரான் ரியாக்டர் என்பதாகும். அதிவேக அணு உலை என்றழைக்கப்படும் இந்த வகை அணு உலையில் பயன்படுத்தப்படும் அணு எரிபொருளின் நியூட்ரான்கள் வெடித்து சக்தியை வெளிப்படுத்தும் போது வெடித்த எண்ணிக்கைக்கு அதிகமான நியூட்ரான்களை உருவாக்கும், அவைகள் வெடித்து மேலும் சக்தியையும், அதே நேரத்தில் மேலும் நியூட்ரான்களையும் உருவாக்கும், எனவே அணுச் சக்தி வெளிப்படுதல் தொடர்ந்து நடைபெறும். இதற்கான அணு எரிபொருள் அதிகம் செறிவூட்டப்பட்டதாக இருக்க வேண்டும், இவ்வகை அணு உலையை யூரல் பகுதியில் உள்ள பெலோயார்க்ஸஃ அணு உலைக் கூடத்தில் கடந்த இருபது வருடங்களாக சோதனை ரீதியாக இயங்கி வருகிறது. இந்த வகை அணு உலைகளையே இரஷ்யா அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கும் என்பதை மெட்விடேவ் தெரிவித்துள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review