November 09, 2009

குடல் உளைச்சல் நோய்க்கு ஆளாகும் பெண்கள்


தற்போது மன உளைச்சல், மன அழுத்தம் என பல பிரச்சினைக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், குடல் உளைச்சல் நோயும், பெண்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாகவும், சமீபத்தில் அதிகமான பெண்கள் குடல் உளைச்சல் நோய்க்கு ஆளானதும் தெரிய வந்துள்ளது.

காலையில் எழுந்ததும் ஆரம்பிக்கும் பரபரப்பு, இரவு தூங்கச் சென்ற பிறகு கூட முடிவதில்லை. கண் மூடித் தூங்கும் போது கூட, எரிவாயு இணைப்பை அடைத்துவிட்டோமா, கதவை மூடினோமா என்று பல கேள்விகளுடனேயே உறங்கிப் போகிறார்கள் பல பெண்கள்.

வீட்டிலுருக்கும் பெண்களை விட, வேலைக்குப் போகும் பெண்களுக்கு பரபரப்பும், அவசரமும் அவசியமாகிவிடுகிறது.

ஒரு நிமிடம் தாமதித்தாலும் ரயில் சென்றுவிடும் என்ற நிலையில், நிதானமாக சாப்பிட முடியாமல், ஏகோ ஒன்றை வாயில் போட்டு மென்று விழுங்கி விடுகிறார்கள்.

சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக வேண்டிய அளவிற்கு நீர் அருந்துவதும் கிடையாது. வயிற்றில் எதையோ அள்ளிப்போட்டுவிட்டு உடனே வேக வேகமாக நடப்பது, வண்டியை இயக்குவது என பரபரப்பான உலகில் நுழைந்துவிடுகின்றனர். அதற்குப் பிறகு பசிக்கிறதோ இல்லையோ, அடுத்த வேளை உணவை நேரம் கிடைக்கும் போது வயிற்றில் போட்டு நிரப்பிவிடுவது. இரவு வந்து சமைத்து சாப்பிடுவதற்குள் பசி வந்து போய் பல மணி நேரம் ஆகியிருக்கும்.

இதுபோன்று உணவு முறைகளில் பெரும் பிரச்சினையுடன் வாழ்பவர்களுக்கு வெறும் அல்சர் வரும் என்று மட்டும்தானே நினைத்திருப்போம்... இல்லை. இதுபோன்ற வாழ்க்கை முறையுடன், மன உளைச்சலும் சேர்ந்து கொண்டால் குடல் உளைச்சல் நோய் தாக்கும் அபாயம் இருக்கிறதாக எச்சரிக்கிறது மருத்துவம்.

வயிற்றில் லேசான வலி என்றாலும் சரி, எரிச்சல் என்றாலும் சரி.. சரியா சாப்பிடாம இருந்தா இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானம் வேறு. மனது உடலை இயக்கும் கருவி என்பது பலரும் அறிந்ததே, அவ்வாறு இருக்க மன அழுத்தம், மன உளைச்சல் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இந்த குடல் உளைச்சல் நோய்தான் சாட்சி.

இதற்கு என தனியாக எந்த அறிகுறியும் இல்லை. வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளைப் போல்தான், வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், உணவுக்குழாய், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்பசமாக இருப்பது போன்றவையும் இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இந்த நோய்க்கு முக்கியக் காரணமாக இருப்பது மன உளைச்சல்தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், மன உளைச்சலினால் பாதிக்கப்படுவர்கள்தான் இந்த நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சினைனகளை எதிர்கொள்ளும் 70 விழுக்காட்டு பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களையும் இது அதிகம் பாதிக்கிறது.

வயிற்று வலி என்றதும், குடல்வால் நோய் அல்லது அல்சர், அல்லது கிருமித் தொற்று போன்ற அனைத்திற்கும் மருந்து எடுத்துக் கொள்ளுவோர், எதற்கும் வலி தீராத கட்டத்தில்தான் இந்த நோயைப் பற்றி அறிந்து கொண்டு சிகிச்சை எடுக்கிறார்கள்.

எனவே, மேற்கூறிய அறிகளிலில் 4க்கும் மேற்பட்டவை உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

முதலில் தனக்கு வந்திருப்பது குடல் உளைச்சல் நோய்தான் என்பதை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வலி அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மன உளைச்சல், அழுத்தம் அதிகமாக இருந்தால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். கவலைகளை குறைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நெருங்கிய நண்பர்களிடம் தனது பிரச்சினைகளைக் கூறி ஆலோசனை பெறலாம்.

மனதிற்குள் புதைத்து வைத்திருக்கும் சில விஷயங்களை மிகவும் நெருங்கிய நண்பர்களிடம் கூறி அதற்கான வழியைத் தேடலாம்.

தியானம், காலை நேர நடைப்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம், வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு போன்றவை இந்த நோய்க்கு நல்லத் தீர்வைத் தரும். நன்கு காய்ச்சி ஆறிய நீரை அருந்த வேண்டும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review