November 12, 2009

அழியும் நிலையில் அரியவகை கடல் குதிரைகள்

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதி தென் தமிழகத்தில்தான் உள்ளது. இங்கு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சுமார் 3600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த அரியவகை உயிரினங்களில் கடற்குதிரை என்னும் ஒருவகை மீன் இனமும் ஒன்று. இதன் தலையானது குதிரையின் தலைபோன்று இருப்பதால், இதற்கு கடற்குதிரை எனப் பெயர் ஏற்பட்டதாம்.

ராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையுள்ள ஆழம் குறைந்த கடல்பகுதியில் காணப்படும் இக் கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும்,சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம்.

உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.

முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறிதாக இருந்தாலும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதியுடையதாகவும் உள்ளது. தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.

பல்வேறு சிறப்புகளை உடைய இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினத்தின் விற்பனை விலை கிலோவுக்கு ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை உள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ருசி மிகுந்த சாறு வகைகளும், மருத்துவப் பொருள்களும் தயாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு இதைப் பயன்படுத்துகின்றனர். உலர்ந்த கடற்குதிரையை வறுத்து அதன் தூளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். தேங்காய் எண்ணெயில் கலந்து வெட்டுக் காயங்களுக்கும் இப் பகுதி மக்கள் உபயோகிக்கின்றனர்.

ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்தாக இருப்பதால், உலக அளவில் இது அதிகமாகத் தேவைப்படுகிறது.

கடலுக்கடியில் சங்கு மற்றும் கடல் அட்டை போன்றவற்றை எடுப்போர் இதனையும் பிடிக்கின்றனர். கடலுக்குள் கடல் தாவரங்கள் உள்ள பகுதிகளுக்குள் மூழ்கி கடற்குதிரைகளையும் கைகளால் சேகரிக்கின்றனர். சுமார் 6 முதல் 10 மீனவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது இதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், இந்த அரியவகை உயிரினம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது.

ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு 120 முதல் 350 கடற்குதிரைகள் வரை பிடிக்கப்படுகின்றன.

இருக்கும் சிலவற்றையாவது அழிவிலிருந்து பாதுகாக்க அழிவுதரும் வலைகள் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும்.

இவற்றை பிடிப்பவர்கள் பற்றிய தகவல் தருவோருக்கு அரசு ரகசிய ஊக்கத்தொகையும் வழங்கலாம். இது போன்ற அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ள கடல்பகுதியில் அரசு மிதவை வேலிகளையும் அமைக்கலாம். இல்லையேல் இந்த அரியவகை உயிரினம் இனிவரும் இளைய சமுதாயத்துக்கு என்னவென்றே தெரியாமல் போய்விடும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review