November 12, 2009

எச்ஐவி நோயின் அறிகுறிகள்

எச்ஐவி நோய் பாதித்தவர்களுக்கு கீழ் கூறும் அறிகுறிகள் காணப்படும். ஆனால் இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவருக்கும் எச்ஐவி நோய் இருக்கும் என்பது அர்த்தமாகாது.

எச்ஐவி பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது காய்ச்சல் மூலம் வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது.

தீவிர எச்ஐவி பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து கட்டி) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது.

இந்த அறிகுறிகள் கூட எச்ஐவி தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் எச்ஐவி தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள திசுக்கள் இதனால் பாதிக்கின்றன.

இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் (வெள்ளை அணுக்கள்) அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் எச்ஐவியின் வேகம் சற்று குறைகிறது.

எச்ஐவி தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு எச்ஐவி தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. எச்ஐவி தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரிவது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

"எய்ட்ஸ்" வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு வெள்ளை அணுக்கள் குறைவதால் எதிர்ப்புசக்தி குறைகிறது. இதனால் எளிதாக எந்த நோயும் எய்ட்ஸ் நோயாளியைத் தாக்குகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு தொற்று நோயாலோ அல்லது பெரிய நோய்த் தாக்குதலாலோத் தான் எளிதில் மரணமடைகிறார்கள்.

எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்ந்து, சுகாதாரமாக உடலைப் பேணி வந்தால் எய்ட்ஸ் நோயாளிகளும் நலமாக பல ஆண்டுகள் உயிர் வாழலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review