January 24, 2011

பாலியல் கல்வி தேவை தானா?

பாலியல் கல்வி தேவை தானா? இப்போதும் பாலியல் என்பது ரகசியமாகவே உள்ளது.பாலியல் என்பது விவாதிக்கப்படவே கூடாத விஷயம் என்று நினைத்துப் பலர் ஒதுக்குகின்றனர். வெளிப்படையாகப் பேசவும் தயங்குகின்றனர்.
ஏனெனில் இது தேவையில்லாத ஒன்று என்ற மனோபாவத்தை நமது சமூகக் கலாசார அமைப்பு மக்களின் மனங்களில் ஏற்படுத்தி விட்டது.பாலியல் இயல்பான ஒன்று தான். பாலியல் தேவை மனித வாழ்விற்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் இன்றியமையாததாகவும் உள்ளது.
பாலியல் சம்பந்தப்பட்ட உண்மைகளை மறைத்து வைப்பதால் அதன் மீது நாட்டம் உண்டாகி, அது என்னவென்று அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் ஏற்படுகிறது. இயற்கையாகவே, மறைத்து வைக்கப்பட்ட எந்தவொரு ரகசியத்திற்கும் கவர்ச்சி இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.
எனவே, பாலியல் பற்றி அறிய, படங்களும், ஒரு தவறான வழிகாட்டுதலை தருகின்றன. இது ஆண், பெண் இருபாலாரையும் மோசமான பாதைக்கு இழுத்துச் சென்று வேதனை தரும் பின் விளைவுகளுக்கு காரணமாகவும் அமைகிறது. 
பாலியல் அறிவை ஊட்டுவதில் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்க்கும்,இளம் வயதில் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மூன்றாவது மனிதர் மூலமாகவோ, மஞ்சள் பத்திரிக்கைகள் வழியாகவோ, மோசமான கதைகள் திரைப்படங்களின் மூலமாகவோ தவறான பாலியல் அறிவு பெறுவதை விட பெற்றோரும் ஆசிரியர்களும் பாலியல் உண்மைகளை அந்தந்த வயதிலேயே அறிவுறுத்துவது நன்மை பயக்கும்.
மேலும் பாலியல் அறிவைச் சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்தால்தான் அவர்கள் பருவம் அடையும்போது, பொறுப்புள்ளவராகவும் நல்ல சமூகத்தின் உறுப்பினர்களாகவும் விளங்க முடியும், பாலியல் தொடர்பான குற்றங்களும் குறையும்.பாலியல் பிரச்சனைகளால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், தற்கொலைகள் குறையும். 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review