November 11, 2009

கட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துகளும்

கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன.

ஏன் என்றால் ஒரு விண்டோஸ் XP வாங்கவேண்டும் எனில் ரூபாய் 6700 ஆகிறது. MS-Office மென்பொருள் வாங்கவேண்டுமெனில் ரூபாய் 10,000 ஆகிறது. இதுவே சேர்த்து மொத்தம் 17,000 ரூபாய் ஆகிறது.

ஒரு தொழிற்சாலையில் குறைந்தது 30 கணினிகள் இருந்தாலும் 5 லட்சம் ரூபாய் ஆகிறது. தொழிற்சாலைகளே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் செலவு செய்து இயங்குதளமும் அலுவலக மென்பொருளையும் வாங்குவதற்கு யோசனை செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் எங்கள் நிறுவனத்தில் ஒரு யோசனை சொன்னேன். இயங்குதளத்திற்கு Linux உம், அலுவலக பயன்பாட்டுக்கு
OpenOffice.org மென்பொருளையும் பயன்படுத்தாலாம் என்று சொன்னேன். இவை இரண்டுமே கட்டற்ற இலவச மென்பொருள்கள். மேலும் முழுதும் இலவசம். எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் போடலாம். பயன்படுத்தலாம். உரிமம் ( License ) வாங்க தேவையில்லை.

ஆனாலும் எல்லோரும் பயந்தனர்.எங்களுக்கு இதில் தான் வேலை செய்ய வரும் என்று. விண்டோஸ் மட்டும் என்ன குழந்தையிலேயே கற்றுக்கொண்டு வந்தோமா ? சிறிது சிறிதாக பழக வேண்டியது தானே.இந்த துறையில் மைக்ரோசாப்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமா என்ன? சரி இந்த மென்பொருள்களை நிறுவி சோதிக்கலாம் என்றனர். பின்னர் Open Office நிறுவி அதை பயன்படுத்தி பார்த்தனர். இயல்பில் MS-Office மாதிரியும் அதை விட அதிகமான வசதிகளும் உள்ளன என்று வியந்தனர். அனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளை திறக்க முடியுமா என்றும் இதை MS-Office வடிவமைப்பில் மெயில் அனுப்பமுடியுமா போன்ற சந்தேகங்கள் எழுந்தன.அவை தீர்க்கப்பட்டும் விட்டன.

பிறகு Ubuntu Linux இயங்குதளத்தை நிறுவி சோதிக்கலாம் என்று எண்ணி நிறுவதொடங்கினேன். அதில் Partition பகுதி தான் புரியவில்லை. அதில் உள்ள Guided - Resizing partition தேர்வு செய்தேன். ஏன் என்றால் எனக்கு விண்டோஸ் இயங்குதளமும் வேண்டும் என்பதால். ஆனால் அந்த முறையில் நிறுவ முடியவில்லை. பின்னர் Guided - Entire Disk கொடுத்து விட்டு விண்டோசை முழுதும் நீக்கிவிட்டு உபுண்டு மட்டும் இருக்குமாறு நிறுவினேன். இரண்டுமே இருக்குமாறு நிறுவுவது எப்படி என்று சொன்னால் நலமாக இருக்கும்.

ஆனால் விரைவில் உபுண்டுவில் நிபுனராகுவது சிரமம் என்றே
தோன்றியது. எப்படி Network அமைப்பது, தமிழ் மொழியை நிறுவுவது, மெயில் அனுப்புவது, இணையம் பயன்படுத்துவது , மாற்று மென்பொருள்கள் போன்ற விசயங்களை தமிழில் படைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்?

எனக்கு சுதந்திர மென்பொருள்களின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. ஆனால் தமிழில் உபுண்டுவை கற்றுக்கொள்ள புத்தகங்களோ அல்லது அதிகமான வலைப்பூக்களோ இல்லை என்று தோன்றுகிறது.

இனிமேல் சுதந்திர மென்பொருள்களின் (Open source Softwares) தேவை அதிகரிக்கும் . லினக்ஸ் இயங்குதளம் முன்னணிக்கு வரும் என்றே தோன்றுகிறது. அதனால் சுதந்திர மென்பொருள்களை அதிகமாக இப்போதிருந்தே பயன்படுத்த முயற்சி செய்தால் நல்லது. மேலும் இவை பற்றிய அதிகமான படைப்புகளை வலைப்பூக்களில் படைப்பதன் மூலம் லினக்ஸ் பற்றிய அறியாமையை நீக்கி விட முடியும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review