November 15, 2009

கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு


மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல் மனிதனும் ஆவார்.

இவர் கமரூன் நாட்டில் ஒதுக்குப்புற கிராமத்தில் வாழ்ந்திருந்தாலும் கொரில்லாக்களோடு எந்த வித நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொரில்லா அல்லது சிம்பன்சிகளின் இறைச்சிகளை உண்ணும் அல்லது தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேறு மனிதர்களிடம் இருந்து இவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

HIV கள் சிம்பன்ஸிகளில் (chimpanzees ) காணப்படும் SIV (Simian Immunodeficiency Virus ) வைரஸிகளின் வகைகள் என்றும் எச் ஐ வி கூட சிம்பன்ஸிகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றி இருக்கலாம் என்றே இது நாள் வரை கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த புதிய வைரஸின் கண்டுபிடிப்பானது எச் ஐ வி கொரில்லாக்களில் இருந்தும் மனிதருக்கு தொற்றி இருக்கக் கூடும் என்ற நோக்கிலும் உயிரியல் மருத்துவ ஆய்வாளர்களைச் சிந்திக்கச் செய்துள்ளது.

இந்த புதிய வகை வைரஸை எச் ஐ வியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் கொண்டு கட்டுப்படுத்த முடியாது என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்ற அதேவேளை இந்த வைரஸ் தொற்றுக் கொண்ட பெண்மணி எயிட்ஸ் நோய்க்குரிய எந்தக் குணங்குறிகளையும் காண்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

விரைந்து கூர்ப்படையக் கூடிய எயிட்ஸ் வைரஸுக்கள் மனிதன் மற்றும் பழைய உலகுக் குரங்குகள் அடங்கும் பிரைமேட்டு வகை உயிரினங்களுக்கிடையே இனம் விட்டு இனம் தொற்றக் கூடியவனவாக விளங்குகின்றன.

சமீபத்தில் தான் ஆபிரிக்கர்கள் மத்தியில் எயிட்ஸ் வைரசிஸிற்கு எதிரான தடுப்பூசிகள் பரிசோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டன என்பதும் ஆபிரிக்காவிலேயே உலகில் அதிக எயிட்ஸ் நோயாளிகள் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்காவை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும் ஆசியப் பிராந்தியம் அதிக எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review