March 31, 2010

செவ்வாய் கிரகம் செல்லத் தயார்..

விண்வெளி ஆய்வில் பல்வேறு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் நிலவுப்பயணத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா, ரஷியா நாடுகள் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டுகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலங்களை அனுப்பி உள்ளது. இந்த கலங்கள் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்து தகவல்களை அனுப்பி வருகிறது. 

இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்யப்போகிறார்கள். இவர்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபடப் போகிறார்கள். இந்த பயணத்துக்கு வீரர்களை தயார் செய்யும் பணிகள் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடந்து வருகிறது. 

பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல சுமார் 250 நாட்கள் ராக்கெட்டில் பயணம் செய்ய வேண்டும். பின்னர் அங்கு 30 நாட்கள் வரை தங்கி இருந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டால் சுமார் 240 நாட்கள் பயணம் செய்தால் தான் பூமியை வந்தடைய முடியும். ஆக மொத்தம் சுமார் 520 நாட்கள் பூமியை விட்டு விண்வெளியில் இருக்க வேண்டும். 

இதை தாங்கும் அளவுக்கு விண்வெளி வீரர்களின் உடல் தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். எனவே அத்தகைய தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய சோதனைகள் நடக்கிறது. பல்வேறு உடல்தகுதி, கல்வித்தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற 11 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களை ஒரு அறையில் 520 நாட்கள் அடைத்து வைத்து சோதனை செய்யப்போகிறார்கள். இந்த அறை ராக்கெட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் பயணம் செய்யும் போது இருக்கும் எடையற்ற தன்மையுடன் இந்த தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி அங்கு தங்கி இருந்து ஆய்வு நடத்துவது போன்ற ஒத்திகை மற்றும் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 

ரஷியாவைச்சேர்ந்த 5 என்ஜினீயர்கள், 2 டாக்டர்கள் மற்றும் பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, மற்றும் சீனா ஆகிய நாடுகளைச்சேர்ந்த தலா ஒரு விண்வெளி வீரர்கள் இந்த சோதனைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சோதனைகள் அடுத்த மாதம் தொடங்கி 520 நாட்களுக்கு நடைபெறும். இவர்கள் தங்கி இருக்கும் போது அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review