இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.
விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்பட்டது.
கூகுலின் இணை நிறுவனரான சர்ஜி பிரைன் விக்கிபீடியாவை இணைய உலகின் மாபெரும் வெற்றிகளில் ஒன்று என குறிப்ப்ட்டுள்ளார்.
கூகுல் அளித்துள்ள நிதியுதவி விக்கிபீடியாவின் தகவல்களை தாங்கி நிற்பதற்கான தொழில்நுட்ப வசதியை உருவாக்க மற்றும் மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.
இணையவாசிகளின் ஆரவ மிக்க பயன்பாட்டால் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் விக்கிபீடியாவின் அதிகரித்து வரும் தகவல் நிலையில் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் விக்கிபீடியா தனது தொழில்நுட்ப வசதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்காக நிதி திரட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கூகுல் தன் பங்குக்கு நிதி வழங்கியுள்ளது.
கூகுலின் உதவி விக்கிபீடியாவிற்கான அங்கீகாரமாகவும் அமைகிறது.