December 30, 2009

பேஷியல் செய்வது மன அமைதிக்கு உதவும்

பொதுவாக நாம் முக அழகைப் பெறுவதற்காக பேஷியல் செய்து கொள்கிறோம். ஆனால் பேஷியல் என்பது முக அழகை விட மன அமைதிக்குத்தான் செய்யப்படுகிறது என்கிறார் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா.



பேஷியல் என்பது என்ன?
பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது.
பேஷியல் செய்யும் முறை எப்படி?
பேஷியல் என்பது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும்.
பேஷியலில் உள்ள வகைகள் என்னென்ன?
பேஷியலில் பல வகைகள் உள்ளன. காய்கறி க்ரீம், பழக் க்ரீம், இயற்கைக் கீரம் என பல வகைகள் உள்ளன. விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு அதில் வகைகள் உள்ளன.
எந்த சருமத்திற்கு எந்த பேஷியல் பொருந்தும்?
பொதுவாகவே எல்லா சருமத்திற்கும் எல்லா பேஷியலும் பொருந்தாது. நம்முடைய சருமத்திற்கு எந்த வகையான பேஷியல் பொருந்துமே அதைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்றால், நமது சருமத்திற்கு உள்ள பிரச்சினைகளைக் கூறி, அழகுக் கலை நிபுணரின் தேர்வுக்கு விட்டுவிடலாம்.
பருக்கள் உள்ளவர்கள் பேஷியல் செய்யலாமா?
பொதுவாக பருக்கள் இருப்பவர்களுக்கு பேஷியல் செய்வதில்லை. அவர்களுக்கு மினி பேஷியல் மட்டுமே செய்யப்படுகிறது. முகத்தை க்ரீம் கொண்டு சுத்தப்படுத்தி, சில கிரீம்களை போட்டு எளிதான பேஷியல் மட்டுமே செய்யவார்கள்.

பேஷியல் செய்தால் என்ன மாற்றத்தை உணரலாம்?
பேஷியல் செய்யும் போது முகத்தில் உள்ள பிரஷர் பாய்ண்ட்டுகளில் அழுத்தம் கொடுக்கும் போது மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது. பேஷியல் செய்தாலே நிச்சயமாக ஒரு நல்ல உணர்வை உணர்வார்கள்.
எவ்வளவுக்கு எவ்வளவு டென்ஷனுடன் வந்தார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியைப் பெறுவார்கள்.
கர்ப்பிணிகள் பேஷியல் செய்யலாமா?
எல்லாருமே கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளக் கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியம் மன அமைதிதான். அது எளிதாக கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பேஷியல் செய்து கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளும் போது முழுக்க முழுக்க அவர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். ஆனால், பேஷியல் செய்யும் போது மனதை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம்.
பேஷியல் செய்து கொள்ள வந்துவிட்டு, மனதை கண்டபடி எதையாவது நினைத்து வறுத்திக் கொண்டிருந்தால் அந்த பேஷியலால் எந்த பலனும் இருக்காது.
எனவே, மன அமைதிக்காக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். பேஷியல் செய்யும் அறையே மங்கலாக இருக்கும். மங்கலாக இருப்பதே நமது மனதை அமைதிப்படுத்தத்தான்.
மற்றவர் நமக்கு ரிலாக்சேஷன் கொடுக்கும் போது தானாகவே நாம் மன அமைதியை அடைவோம். மன அமைதியும், ரத்த ஓட்டம் சீராவதும் நமது உடலுக்கு நிச்சயம் நல்ல பலனைத் தரும் என்பதை மறுக்க முடியாது.
சுயமாக பேஷியல் செய்து கொள்ளலாமா?
மற்றவரிடம் பேஷியல் செய்து கொள்வதால் நூறு விழுக்காடு பலன் கிடைக்கும் என்றால், நீங்களே செய்து கொள்ளும் போது 20 விழுக்காடுதான் கிடைக்கும்.
மற்றொருவர் நமக்கு மசாஜ் செய்யும் போதுதான் அதன் பலன் நமக்குக் கிடைக்கும். நமக்கு நாமே செய்து கொள்ளும் போது முக்கியமாக பிரஷர் பாய்ண்ட்டுகள் நமக்குத் தெரியாது. எதையும் சரியாக செய்யும் போதுதான் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நமக்கு நாமே செய்யும் போது டென்ஷன் அதிகரிக்கத் தான் செய்யுமேத் தவிர மன அமைதிக் கிடைக்காது.
மன அமைதியைப் பெற வேண்டுமானால் மாதத்தில் ஒரு முறை அழகுக் கலை நிபுணரிடம் செய்து கொள்வதுதான் சிறந்தது.
கல்யாணப் பெண் எந்த விதமான பேஷியல் செய்து கொள்ளலாம்?
எந்த பேஷியலாக இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் சருமத்தைப் பொறுத்தே தேர்வு செய்ய முடியும்.
முதன் முதலாக பேஷியல் செய்து கொள்ள வரும் திருமணப் பெண்ணிற்கு நான் ப்ரூட் பேஷியல்தான் தேர்வு செய்வேன்.
ஏற்கனவே பல முறை பேஷியல் செய்தவர்களாக இருந்தால் மட்டும் கோல்ட் பேஷியல் தேர்வு செய்வேன். கோல்டு பேஷியல் செய்தால் திருமண சடங்குகள் முடிந்தும் அவர்களது சருமம் பொலிவாக இருக்கும்.
ஆனால் பேஷியல் செய்து வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தால் 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை சருமத்தின் பொலிவு வெளிப்படும். ஆனால் திருமணப் பெண் எப்படி வெளியில் செல்லாமல் இருப்பார்கள். ஷாப்பிங், அது இது வென வெளியில் செல்ல வேண்டி வரும் என்பதால் அதற்கு கோல்டு பேஷியல் ஏற்றதாக இருக்கும்.
கோல்டு பேஷியலுக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன?
பேஷியலில் சில்வர் பேஷியல், கோல்டு பேஷியல், டைமண்ட் பேஷியல் என பல வகை இருந்தாலும் கோல்டு பேஷியல் எல்லாருக்குமே பொருந்தி விடும்.
எந்த பேஷியலாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்படும் க்ரீம்கள்தான் மிகவும் முக்கியம். அதைப் பொருத்தே அந்த பேஷியல் எப்படி வரும் என்பதைக் கூற முடியும்.
முதல் முறையாக பார்லர் போகும் போது..
முதல் முறையாக நாம் பார்லர் போகும் போது அங்கு சொல்லப்படும் விஷயங்களும், க்ரீம்களின் வகைகளும் நமக்கு ஒன்றும் புரியாது.
அப்படி இருக்கும் நிலையில் பேஷியல் தேர்வை எப்படி நாம் செய்ய முடியும் என்ற நமது சந்தேகத்திற்கு விடை கூறுகிறார் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா.
முதல் முறையாக ஒரு பார்லருக்கு போனதும் பேஷியல், ப்ளீச்சிங் செய்து கொள்ள வேண்டாம்.
எந்த பார்லருக்கு சென்றாலும் முதலில் ஐப்ரோ செய்வது, பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவை செய்து கொள்ளுங்கள்.
இதிலேயே அந்த பார்லரைப் பற்றி உங்களுக்குப் புரிந்து விடும். பார்லரில் இருப்பவர்களுக்கும் உங்களது சருமத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
முதலில் ஐப்ரோ செய்தாலே அவர்களது வேலை எப்படி இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். முகத்தை அழகாக வைத்துக் கொள்வது புருவங்கள்தான். அதை ஒருவர் அழகாக செய்தால் அவர்களது மற்ற வேலைகளும் நன்றாக இருக்கும் என்று நம்பலாம்.
அவர்களது வேலை நுணுக்கத்தை வைத்தே சொல்லிவிடலாம் அல்லவா?
உடலில் முகம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் எடுத்ததும் முகத்தைக் கொடுத்து விடாமல் இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்து பிறகு அவர்கள் மீது நம்பிக்கை வந்தால் பேஷியல் மற்றும் ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review