அதிகாலைத் தூக்கம் ஆனந்தம் தரும் ஆழ்ந்த உறக்கமாக இருக்கும். வெயில் சுள்ளுன்னு முகத்தில் விழுந்தபிறகுதான் எழத்தோன்றும். இல்லாவிட்டால் பசி வயிற்றைக் கிள்ளிய பிறகு எழுவோம்.
அப்படி இருக்கும்போது, அதிகாலையில் அலாரம் வைத்து எழுப்பினால் எப்படி இருக்கும்? சத்தம்போட்ட கடிகாரத்துக்கு உச்சி மண்டையில் ஒரு தட்டு. செல்போனுக்கும் அதே கதிதான். மீண்டும் தூக்கத்துக்குள் புகுந்து சொர்க்கப் பிரவேசம் செய்வோம்.
இனி அப்படி தூக்கத்தைக் கெடுத்து எழவேண்டாம். உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்தபிறகு எழுப்பிவிடும்படியான `அலாரம்' உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்தக்கருவி கடிகாரம் வடிவில் இருக்கிறது. இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஸ்லீப்டிராக்கர் எனப்படும் இந்தக்கருவியை கையில் கட்டிக் கொண்டு படுத்தால்போதும். நமது ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்காமல் போதுமான ஓய்வு கிடைத்தபிறகு எழுப்பிவிடுமாம். மற்றவற்றை ஆய்வாளரே கூறுகிறார்...
இதுவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடும் கடிகாரம், செல்போன்கள் போன்றவை குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் எழுப்பிவிடும். இதனால் நிம்மதியான உறக்கம் கெடும். திடீரென்று எழுவதால் மன அழுத்தம், தோல் பாதிப்பு, சோர்வு என பல பாதிப்புகள் ஏற்படும்.
ஆனால் எங்களது உடற்கடிகாரம் (பாடிகிளாக்) தூக்கத்தின் அளவை கண்காணிக்கும். மூளையானது மெலட்டானின் என்னும் ரசாயனம் சுரப்பதை நிறுத்தத் தொடங்கிவிட்டால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிடும். அதை கண்காணித்து இந்தக்கருவி நம்மை எழுப்பிவிடும். இதில் ஏற்படும் அதிர்வுகள் 7-9 ஹெர்ட்ஸ் வரை இருப்பதால் வேறு பாதிப்புகளும் ஏற்படாது.