December 20, 2009

வலியை உணரக் கூடிய ரோபோ

ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் கூடிய ரோபோவை ஜப்பான் நாட்டில் வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோ வலியை உணரக் கூடியது மட்டுமல்ல; வலியை உணர்த்தக் கூடியதும் என்பதுதான் விசேஷம்.


ரோபோ ஆய்வு மற்றும் தயாரித்தல் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. ரோபோ பயன்பாட்டிலும் அந்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வு ஜப்பானில் தீவிரமாக நடைபெற்று வருவதால் புதுப்புது ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருவதாலும் அங்கே சர்வதேச ரோபோ கண்காட்சி அண்மையில் நடத்தப்பட்டது.

தலைநகர் டோக்கியோவில் நான்கு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பலவிதமான ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் வலியை உணரும் ரோபோ. ரோபோ நோயாளியாக இது அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் இதற்கு தனியே பெயரும் சூட்டப் பட்டுள்ளது. சிம்ராய்டு என்பது இதன் பெயர்.

அழகான இளம்பெண்ணை போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, பல் மருத்துவ மாணவர் களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவால் பல்வலியை உணர்ந்து வெளிப்படுத்த முடியும்.

பல்வலிக்கு சிகிச்சை பெறும் நோயாளி எப்படி வலியால் துடிப்பாரோ அந்த உணர்வை இந்த ரோபோ வெளிப்படுத்தும். பயிற்சி மருத்துவர்கள் இந்த ரோபோவை கொண்டு பயிற்சியில் ஈடுபடும் போது, நோயாளிகள் வலியை எப்படி உணர்வார்கள் என்பது குறித்த அனுபவத்தை பெற முடியும் என்று கருதப்படுகிறது.

மருத்துவர்கள் நோயாளிகளின் வலியை உணர்வது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக நோயாளிகளை கஷ்டப்படுத்தாமல் இந்த பணியை செய்வதற்காக என்று ஒரு ரோபோவை உருவாக்கி உள்ளனர். விரைவில் இந்த ரோபோ விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல் மருத்துவர்கள் நோயாளிகளின் உணர்வை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க இந்த ரோபோ நோயாளி உதவும் என்றும் கருதப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review