தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம் செடி, கொடி போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தமரங்கள், செடிகள், கொடிகள், போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் ( ferns), பாசி (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), பூஞ்சணங்கள் போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.
பயன்கள்
இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். சுமார் 350,000 வகையான பாசி, புல், செடி, கொடி, மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளன. இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் அகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், மண்ணெண்ணை, டீசல் ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது.மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின. தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன.
வரைவிலக்கணம்
கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் எல்லா உயிரினங்களையும், தாவரங்கள் (நிலைத்திணை), விலங்குகள் (நகர்திணை) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். 18 ஆம் நூற்றாண்டில் லின்னேயசின் முறைப்படி(Linnaeus' system), இவை வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு இராச்சியங்கள் (Kingdoms) ஆகின. வெஜிட்டபிலியா இராச்சியம் பின்னர் பிளாண்ட்டே (Plantae) என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பிளாண்ட்டே இராச்சியத்தில் ஆரம்பத்தில் அடக்கப்பட்ட பல வகைகள் தொடர்பற்றவையாக இருப்பது அறியப்பட்டது.பூஞ்சணங்கள் மற்றும் பல வகை பாசிகள் (அல்காக்கள்) வேறு இராச்சியப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இருந்தாலும் இவை பல சூழ்நிலைகளில் தாவரங்களாகவே இன்னும் கருதப்பட்டு வருகின்றன.தாவரங்கள் என்று கூறும்போது அவை பின்வரும் மூன்று கருத்துருக்களில் ஒன்றால் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன:
- நிலத் தாவரங்கள்: இவை எம்பிரையோபைட்டா, மீட்டாபைட்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
- பச்சைத் தாவரங்கள்: இதற்கு விரிடிபைட்டா, குளோரோபினாட்டா போன்ற பெயர்களும் உண்டு. இதற்குள் முன்னர் குறிப்பிட்ட நிலத்தாவரங்களும் அடங்குகின்றன. அவற்றுடன், கரோபைட்டா, குளோரோபைட்டா என்பனவும் அடங்கும்.
- ஆர்க்கீபிளாஸ்டிடா: பிளாஸ்டிடா, பிரிமோபிளாண்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இதற்குள் பச்சைத் தாவரங்கள் அனைத்தும் அடங்குவதுடன் ரொடோபைட்டா, குளுக்கோபைட்டா என்பனவும் அடங்குகின்றன.