March 12, 2010

மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்

சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று மற்றும் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கும் போனாக Intex IN 5030 வெளிவந்துள்ளது. ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில், சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயக்கத்தில் உள்ளது. இரண்டிலும் அழைப்புகள் வந்தால் மாற்றி மாற்றி பேசிக் கொள்ளும் வசதியை இந்த போன் தருகிறது.
 
ஜாவா இயக்கத்தில் செயல்படும் இந்த போனில் இரண்டு பேட்டரிகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்று 4 மணி நேரமும், மற்றொன்று 120 மணி நேரமும் தாக்குப் பிடிக்கின்றன.
 
Intex IN 4420 மாடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. இந்த போனில் வித்தியாசமான ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் இந்திய கரன்சியில் போலியான ரூபாய் நோட்டுக்களை கண்டறியலாம்.
 
நெட்வொர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப் படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்று அறியலாம். இரண்டு எல்.இ.டி. டார்ச் லைட் தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, இந்திய திருவிழாக்களையும் விசேஷங்களையும் காட்டும் காலண்டர் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளன.
 
இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பயன்படுத்தும் சக்தியைக் கொண்டு ள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.
 
இரண்டு போன்களிலும் எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த செயலாக்கம், மோடம், வெப்காம் செயல்பாடு, பி.சி. சூட், ஜி.பி.ஆர்.எஸ்., வாப், மொபைல் ட்ரேக்கர், ஆட்டோ கால் ரெகார்டர், கரன்சி கன்வெர்டர், மெமரியை 4ஜிபி வரை அதிகமாக்கும் வசதி ஆகியவை உள்ளன. 

டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!


ராட்சத விலங்கான டைனோசர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது பூமியைத் தாக்கிய ராட்சத எரிநட்சத்திரம் தான் என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.பூமியில் முன்பு வலம் வந்து கொண்டிருந்த ராட்சத பாலூட்டிகளான டைனோசர்கள் எப்படி மறைந்தன என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

பூமியின் தென் பகுதியில் (இப்போது இந்தியா உள்ள பகுதி) மிகப் பெரிய அளவிலான எரிமலைகள் வெடித்துச் சிதறியதால் டைனோசர்கள் அழி்ந்ததாக ஒரு கருத்தும், எரி நட்சத்திரம் தாக்கியதால்தான் டைனோசர்கள் இறந்ததாக இன்னொரு கருத்தையும் விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர்.

எரிமலை வெடித்ததாக கூறும் விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைக்கு தற்போது 41 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று தீர்வைக் கூறியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு சயின்ஸ் இதழில் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். தற்போது ஆய்வு முடிவை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது ஒரு ராட்சத எரிநட்சத்திரம். இதன் காரணமாக பூமியில் இருந்து வந்த பாதி அளவிலான உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. அதில் டைனோசர்களும் ஒன்று.

பூமியைத் தாக்கிய அந்த எரிநட்சத்திரத்தின் அளவு 15 கிலோமீட்டர் அகலம் உடையதாகும். தற்போது மெக்சிகோ உள்ள பகுதி அன்று சிக்கக்ஸிலப் என்று அறியப்பட்டது. அந்த இடத்தில்தான் இந்த எரிகல் வந்து மோதியது.

இதன் காரணமாக பூமிப் பந்தின் பெரும் பகுதியில் பெரும் தீப்பிழம்புகள் தோன்றின. 10 ரிக்டருக்கும் மேலான நிலநடுக்கங்கள் பூமியை சிதறடித்தன. கண்டங்களில் பெருமளவில் நிலமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் ராட்சத சுனாமிகள் தோன்றி பூமிப் பரப்பில் பாதியை அழித்து விட்டது.

ஹீரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டின் சக்தியை விட பல கோடி மடங்கு அதிக அளவிலான வேகத்துடனும், சக்தியுடனும் அந்த ராட்சத எரிநட்சத்திரம் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால்தான் பூமியே சிதறுண்டு போயுள்ளது.

இந்த தாக்குதலில் பூமியில் இருந்து வந்த உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை பூண்டோடு அழிந்து போய் விட்டன. அவற்றில் டைனோசர்களும் ஒன்று.

எரிநட்சத்திரம் தாக்கியதால் ஏற்பட்ட பெரும் பிரளயத்தால் பூமியின் பெரும்பாலான பகுதிகளை இருள் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான் டைனோசர்கள் அழிந்து போயுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஜெர்மனி விஞ்ஞானி பீட்டர் ஷூல்ட் கூறுகையில், 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததாக நமக்கு தடயங்கள் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது அப்போது பூமியைத் தாக்கிய எரிநட்சத்திரம்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது.

மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்புகளால் டைனோசர்கள் இறந்ததாக கூற முடியாத அளவுக்கு எங்களது ஆய்வு முடிவுகள் உள்ளன.

டைனோசர்கள் அழிந்த காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பின்னர்தான் மனிதர்கள் சக்தி வாய்ந்த உயிரினங்களாக பூமியில் உருவெடுத்தனர். எனவே இந்தப் பிரளயம், மனித குல வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம் என்றார்.

March 11, 2010

ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ள‌தாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது.

ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும்  புத்த‌கண்க்க‌ளை ப‌டிக்க‌வும் அதிக‌ம் உத‌வ‌க்கூடிய‌ இதில் கேமிராவும் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் கால‌ண்ட‌ர் வ‌ச‌தியும் இணைக்க‌ப்ப‌டுள்ள‌து.

இத‌ன் விலையும் ஐபேடை விட‌ குறைவாக‌ இருக்க‌லாம் என்று எதிர்பார்க்க‌ப‌டுகிற‌து.எப்போது வேண்டுமானாலும் இத‌ற்கான‌ அறிவிப்பு மைக்ரோசாப்டிட‌ம் இருந்து வ‌ர‌லாம் என்கின்ற‌ன‌ர்.

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.

இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.

“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.

ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.

ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.

“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.

“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.

`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில்,
 
பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.

அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.

“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.

அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.

அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.

ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.

பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.

விரைவில் வருகிறது 3டி டி.வி.

சினிமா தியோட்டர்களில் மட்டுமே பார்த்து வந்த 3டி எபக்டை, இனி டி.வி.,யிலும் பார்த்து கொள்ளலாம். இந்த முயற்சியில் தான் தற்போது சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிறுவனங்கள் தயாரித்துள்ள 3டி டி.வி.,க்களை விரைவில் சந்தையில் விட உள்ளன. இதன் விலை 3000 டாலர் வரை இருக்கும் என்று எதிர்பாக்கப் படுகிறது. பானசோனிக் நிறுவனம் வெளியிட உள்ள 3டி டி.வி.,யில், 3 டி கண்ணாடிகள் தரப்படுகின்றன.
 
இது, தியேட்டர்களில் தரப்படுவதைப் போல பயன்படுத்தியதும் தூக்கியெறியும் ரகமல்ல. இவை அளவில் பெரியதாகவும், ரீசார்ஜ் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் கண்ணாடிகளாகவும் இருக்குமாம்.
 
ஹாலிவுட்டில் ஷ்ரெக், அவதார், அலைஸ் இன் வொன்டர்லேண்ட் என பெரும்பாலும் 3 டி படங்கள் வரத் தொடங்கிவிட்டதால் அவற்றுக்கு தொலைக்காட்சி உலகிலும் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்த வேண்டிய அவசியம் காரணமாக இந்த 3டி டிவிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
எப்படியும் இந்த ஆண்டு 40 லட்சம் 3 டி டிவிக்கள் விற்றுவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review