September 02, 2011

ஸ்குரோல் பார் பயன்பாடு

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் அனைத்து புரோகிராம்களையும் பயன்படுத்துகையில், நம் பைலில் மேலும் கீழுமாக எளிதாகச் செல்ல, வலது புறம் எல்லைக் கோட்டில் உள்ள கட்டம் நமக்கு உதவுகிறது. இதனை ஸ்குரோல் பார் (Scroll Bar) என அழைக்கிறோம். இந்த பட்டன் மீது மவுஸ் கர்சரை வைத்து அழுத்தி இழுப்பதன் மூலம் மேலும் கீழுமாக, நம் பைலில் செல்ல முடிகிறது. ஆனால், இந்த ஸ்குரோல் பார் நமக்கு இன்னும் சில விஷயங்களையும் காட்டு கிறது என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி, நம் பைல் உள்ளாக, சில வரையறை களுடன், கர்சரை வைத்துள்ள இடத்திலிருந்து நகரலாம். 

மேலாக, மேல் நோக்கி உள்ள சிறிய முக்கோணத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால், ஒரு வரி மேலாகச் செல்லலாம்.

அந்த மேல் முக்கோண அடையாளத் திலிருந்து கீழாக ஸ்குரோல் பார் எலிவேட்டர் பட்டன் (Elevator Button) உள்ள இடம் வரையிலான இடத்தில் கிளிக் செய்தால், உங்கள் மானிட்டர் திரை அளவில், ஒரு திரைக் காட்சி மேலாகச் செல்லலாம். 

அடுத்து எலிவேட்டர் பட்டன் எனப்படும் முக்கிய கட்டத்தின் மீது கிளிக் செய்து பைல் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்தச் சின்ன கட்டமானது, நீங்கள் பயன்படுத்தும் பைலில், எந்த அளவு உங்களுக்குத் திரையில் காட்டப் படுகிறது என்பதைக் காட்டுகிறது. 

இந்த பட்டனிலிருந்து கீழாக உள்ள, கீழ் நோக்கிய முக்கோணம் வரையிலான இடத்தில் கிளிக் செய்தால், ஒரு திரை அளவு கீழே செல்லலாம். 

கீழாக, கீழ் நோக்கி உள்ள சிறிய முக்கோணத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால், ஒரு வரி கீழாகச் செல்லலாம்.

எனவே, பைல் ஒன்றில் நாம் சென்று வர இந்த ஸ்குரோல் பட்டனை நாம் முழுமையாகப் பல வழிகளில் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு

இன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பு வர இருக்கிறது. இந்தத் தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சினோப்ஸ்கி, புதிதாக அமைக் கப்பட்டுள்ள ஒரு வலைமனையில் (http://blogs.msdn.com/b/b8/ archive/2011/08/15/welcometobuildingwindows8.aspx) தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன சோதனைப் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், நிறுவனங்கள், சாப்ட்வேர் புரோகிராம் தயாரிப்பவர் களுடன் தகவல் களைப் பரிமாறிக் கொள்ள, மைக்ரோசாப்ட் விரும்புவதால், அந்த வலை மனையைத் தொடங்கி யுள்ள தாகவும் அதில் அறிவிக்கப் பட்டுள்ளது.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 8 பதிப்பு முழுவதுமான புத்துணர்ச்சியுடன் காட்டும். நிறைய புதிய விஷயங்கள் அதில் தரப்பட்டுள்ளன. இந்த பதிப்பில் மட்டுமே காணப்படும் வசதிகள் பல இதில் அடங்கியுள்ளன. எனவே இவற்றை அறிவிப்பு செய்திட இன்னும் சில நாட்களில் விவரங்கள் அறிவிக்கப் படும் என்று இதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடிப்படை இயக்க விஷயங்கள் முதல் யூசர் இன்டர்பேஸ் வரையிலான பல தகவல்கள் தரப்பட இருக்கின்றன. 

இப்போதைக்கு ஒன்று மட்டும் மிகப் பலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்கும் கம்ப்யூட்டர்கள் அனைத்தும், விண்டோஸ் 8 சிஸ்டத்தையும் இயக்க முடியும். எந்தவிதமான ஹார்ட்வேர் மேம்பாடு தேவைப்படாது.

சென்ற மே மாதத்தில், மைக்ரோசாப்ட் ஸ்டீவ் பால்மர், வரும் 2012ல் உறுதியாக விண்டோஸ் 8 வரும் எனத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், அது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால், இந்த புதிய வலைமனையும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்டர்நெட் போதை

சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதை பதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர் களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகி றார்களோ, அதே போலத்தான் இன்டர் நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள் ளனர். 
இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் -- ஆகியன வற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டு ள்ளனர். எனவே இது தடை படுகையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.
ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால், ஆஹா! இன்று விடுதலை; சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்கும் போதும், மீண்டும் அதனை எடிட் செய்திடும் போதும், டெக்ஸ்ட் செலக்ட் செய்திடும் வேலையை அடிக்கடி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. அதுவே பல நேரங்களில் முதலில் செய்து முடிக்க வேண்டிய வேலையாகவும் உள்ளது. எனவே தான், வேர்ட் புரோகிராம் டெக்ஸ்ட் செலக்ட் செய்திட பல வழிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.கிளிக் செய்து மவுஸால் இழுப்பது (Click+Drag): பொதுவாக எல்லாரும் மேற்கொள்ளும் வழி இதுவே. கர்சரை தேவைப்பட்ட இடத்தில் நிறுத்தி, அப்படியே நான்கு திசைகளில் ஏதேனும் ஒன்றில், நம் தேவைக்கேற்ப இழுப்பது. 

2. ஷிப்ட்+ அம்புக்குறி (Shift+Arrow): இந்த கீகளின் பயன்பாட்டில், ஒரு கேரக்டர் அல்லது ஒரு வரி, ஒரு நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, தேவைப்படும் அம்புக்குறி கீயினைத் தேர்ந்தெடுத்து அழுத்தினால், டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் படும். 

3.ஷிப்ட்+ஹோம்/எண்ட்(Shift+Home+End): இங்கு இரு வழிகளைப் பயன்படுத்த லாம். ஷிப்ட்+ஹோம் கீகளை அழுத்தினால், கர்சர் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, அந்த வரியின் தொடக்கம் வரை தேர்ந்தெடுக்கப் படும். ஹோம் கீக்குப் பதிலாக, எண்ட் கீ அழுத்தினால், வலது முனை இறுதி கேரக்டர் வரை தேர்ந்தெடுக்கப்படும். 

4. டபுள் கிளிக் (Click+Click): கர்சர் இருக்கும் அப்போதைய சொல்லை மட்டும் தேர்ந்தெடுக்க, டபுள் கிளிக் செய்திடவும். வேர்ட் அந்த சொல்லின் இடது முனையிலிருந்து வலது முனை வரை, ஒரு ஸ்பேஸ் தென்படும் வரை தேர்ந்தெடுக்கும்.

5. மூன்று முறை கிளிக் (Click+Click+Click): மூன்று முறை கிளிக் செய்தால், கர்சர் உள்ள பாரா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். 

6. மார்ஜின்+கிளிக் (Margin+Click): ஒரு வரி முழுவதும் தேர்ந்தெடுக்க, கர்சரை இடது மார்ஜின் கொண்டு செல்லவும். கர்சர், ஆரோ பாய்ண்ட்டராக மாறும் வரை கர்சரை, மார்ஜின் கோட்டில் சற்று நகர்த்தவும். அவ்வாறு மாறியவுடன், கிளிக் செய்திடவும். இதே வேலையை, ஹோம்+ ஷிப்ட்+எண்ட் கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். ஆனால் இந்த கீகள் கீ போர்டில் இருக்கும் இடங்கள், நமக்குச் சற்று சிரமத்தை அளிக்கும். 

7. மார்ஜின்+கிளிக்+இழுத்தல் (Margin+Click+ Drag): இது மேலே தரப்பட்டுள்ள வழியின் அடுத்த நிலை. மார்ஜின் கோட்டில் கர்சரை வைத்து, கிளிக் செய்தவாறே இழுத்தால், வேர்ட் பல வரிகளை, ஏன் பாராக்களை தேர்ந்தெடுக்கும். இழுப்பதை நிறுத்தும் வரை, இழுக்கும் இடத்தில் உள்ள டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப் படும்.

8. கண்ட்ரோல்+ ஏ (Ctrl+A): வேர்ட் டாகுமெண்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். 

9. கண்ட்ரோல் + கிளிக் (Ctrl+Click): ஒரு வாக்கியம் முழுவதும், வரி மட்டும் இல்லாமல், தேர்ந்தெடுக்க, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, வாக்கியத்தின் எந்த இடத்திலும் கிளிக் செய்திடலாம். 

10. கிளிக் + ஷிப்ட்+ கிளிக் (Click+ Shift+Click): டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க, அந்த பகுதியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்து நிறுத்தவும். அதன் பின்னர், ஷிப்ட் கீயை அழுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், டெக்ஸ்ட்டின் எதிர் முனையில், அப்பகுதி முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திட வேண்டும். 

11. ஆல்ட் + ட்ராக் (Alt+Drag): நெட்டு வாக்கில் டெக்ஸ்ட்டில் ஒரு பகுதியை வேர்ட் டாகுமெண்ட்டில் தேர்ந்தெடுக் கலாம். ஆல்ட் கீயை அழுத்தியவாறு, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட் பகுதியின் மீது மேல் கீழாகவும், வலது இடதாகவும் செல்லலாம். இந்த வேலையைத் தொடங்கும் முன்னரே, ஆல்ட் கீயை அழுத்திக் கொள்ள வேண்டும். 

12. செலக்ட்+கண்ட்ரோல்+செலக்ட் (Select+ Ctrl+Select): டாகுமெண்ட்டில் தொடர்பற்ற நிலையில், சில டெக்ஸ்ட் தொகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், முதலில் ஒரு டெக்ஸ்ட் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அடுத்த பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, தொடர்பற்ற டெக்ஸ்ட் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அவற்றை கட், காப்பி, பேஸ்ட் போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.

13. கண்ட்ரோல்+ஷிப்ட்+ இடது/வலது அம்புக்குறி (Ctrl+Shift+Left/Right Arrow): ஒரு சொல்லின் வலது அல்லது இடது பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க, கர்சரை சொல்லில், நாம் தேர்ந்தெடுக்க விரும்பும் இடத்தில் வைத்து, கண்ட்ரோல்+ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, நம் விருப்பதிற்கேற்ப, வலது அல்லது இடது கீயை அழுத்த வேண்டும். ஸ்பேஸ் உள்ள இடத்தில் கர்சரை வைத்து, மேலே சொல்லியபடி அழுத்தினால், சொல் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். 

14.கண்ட்ரோல்+ஷிப்ட்+ மேல்/கீழ் அம்புக்குறி (Ctrl+Shift+Left/Right Arrow): மேலே குறிப்பிட்ட படி, ஒரு பாராவில், மேல் அல்லது கீழ் பகுதிகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், கர்சரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடத்தில் வைத்து, கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்தியவாறே, மேல் அல்லது கீழ் அம்புக் குறி கீயினை அழுத்த வேண்டும். 

15.ஆல்ட்+கண்ட்ரோல்+ஷிப்ட்+பேஜ் அப்/பேஜ் டவுண் (Alt+Ctrl+Shift+Page Up/Page Down): இது சற்று குழப்பமான கீ இணைப்பு. கர்சர் இருக்கும் இடத்தில் இருந்து, திரையில் காட்டப்படும் டெக்ஸ்ட் பகுதியின் தொடக்க நிலை வரை தேர்ந்தெடுக்கவும் அல்லது இறுதி நிலை வரை தேர்ந்தெடுக்கவும், இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும். இது சற்றுக் குழப்பமாக உணர்ந்தால், கர்சரைத் தொடக்க நிலையிலோ அல்லது முடிவான நிலையிலோ கொண்டு சென்று, ஷிப்ட் கீயை அழுத்தியவாறு, கர்சரை நகர்த்தியும் தேர்ந்தெடுக்கலாம்.

வெப் மெயில் பேக் அப்

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்?
பெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்துள்ளனர். அப்படியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு எப்படி பேக் அப் எடுப்பது என்ற வழிகளை இங்கு காணலாம். ஜிமெயில், யாஹூ மற்றும் ஹாட் மெயில் தளங்களில் உள்ள மின்னஞ்சல்களுக்கான பேக் அப் வழிகள் இங்கு தரப்படுகின்றன.

1.ஜிமெயில்: கூகுள் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய சேவை அதன் இலவச ஜிமெயில் ஆகும். ஏறத்தாழ 7.5 கிகா பைட்ஸ் அளவில் ஒவ்வொருவருக்கும் இடம் தந்து, நம் மின்னஞ்சல் கணக்கை வைத்துக் கையாள வசதி செய்துள்ளது. இதற்காக, நம் குப்பை மெயில்கள் அனைத்தையும் இதில் தேக்கி வைப்பது நியாயமாகாது. தேவையற்ற வற்றை நீக்கலாம். நமக்கு முக்கியமான மெயில்களைக் குறித்து வைக்கலாம். அவற்றை பேக் அப் செய்திடலாம். அதிர்ஷ்டவசமாக, இதற்கென ஜிமெயில் பேக் அப் என்று ஒரு புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.
ஜிமெயில் பேக் அப், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்குகிறது. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, ஒரு சில நிமிடங்களில் நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை பேக் அப் செய்திடலாம்.

1.1 முதலில் ஜிமெயில் பேக் அப் புரோகிராமினைhttp://www.gmailbackup.com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். மிக எளிதாக இதனை மேற்கொண்டவுடன், நம் ஸ்டார்ட் மெனுவில் ஒரு ஷார்ட் கட் மற்றும் டெஸ்க்டாப்பில் ஐகானாக இந்த புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது. 

1.2 ஜிமெயில் பேக் அப் புரோகிராமினைத் திறக்கவும். உங்கள் முழு ஜிமெயில் முகவரியினையும் பாஸ்வேர் டையும் தரவும். எந்த போல்டரில் பேக் அப் சேவ் செய்திட என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மாறா நிலையில் தரப்படும் ஜிமெயில் பேக் அப் போல்டரையும் வைத்துக் கொள்ளலாம். 

1.3 எந்த எந்த மின்னஞ்சல் செய்திகளை பேக் அப் செய்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேதி வாரியாகவும் தேர்ந்தெடுக்கலாம். 

1.4. அடுத்து Backup பட்டனை அழுத்தி, பேக் அப் வேலையைத் தொடங்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அஞ்சல்களின் எண்ணிக்கைக்கேற்ப, நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பேக் அப் வேலை நடக்கையில், மற்ற பணிகளை நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். எவ்வளவு பேக் அப் ஆகியுள்ளது என்பதுவும் உங்களுக்குக் காட்டப்படும். மொத்தமாக அனைத்தையும் ஒரே நேரத்தில் பேக் அப் செய்திடாமல், குறிப்பிட்ட அளவில், நமக்கு வசதியான நேரத்திலும் பேக் அப் செய்திடலாம். அடுத்தடுத்து பேக் அப் செய்கையில், ஏற்கனவே பேக் அப் செய்த மெயில்களை ஜிமெயில் பேக் அப் விட்டுவிடும்.

1.5. பேக் அப் செய்த மெயில்களை, பின்னர் மீண்டும் அக்கவுண்ட்டிற்குக் கொண்டு செல்லலாம். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட், பேக் அப் செய்து வைத்துள்ள போல்டர் ஆகிய தகவல்களை அளித்து மீண்டும் கொண்டு வரலாம். ஒரு அக்கவுண்ட் டிலிருந்து பேக் அப் செய்ததை, இன்னொரு அக்கவுண்ட்டிற்கும் மாற்றலாம்.
ஜிமெயில் பேக் அப் செய்து பார்த்தபோது, மிக அருமையாக இருந்தது. நம் இன்பாக்ஸ், சென்ட் போல்டர், லேபில் என அனைத்தும் பேக் அப் செய்யப்பட்டு மீண்டும் கிடைக்கின்றன.
ஜிமெயில் பேக் அப் பைல்கள் .EML என்ற பார்மட்டில் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை எந்த இமெயில் கிளையண்ட் புரோகிராமிலும் திறந்து பார்க்கலாம்.
இந்த பேக் அப்பில் ஒரே ஒரு குறை உள்ளது. ஜிமெயில் தொகுப்பில் நாம் ஏற்படுத்தும் சேட் லாக் (chat logs) பைல்கள் பேக் அப் செய்யப்படுவது இல்லை.

2.ஹாட் மெயில்: ஹாட் மெயிலுக்கென பேக் அப் புரோகிராம் எதுவும் அதன் தளத்தில் இல்லை. ஆனால், மற்றவர்கள் வடிவமைத்துக் கொடுத்துள்ள புரோகிராம்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதில் Mail Store Home என்ற புரோகிராம் மிக நன்றாகச் செயல்படுகிறது. 

2.1. இந்த Mail Store Home புரோகிராமினை http://www.mailstore.com/en/mailstoreserver.aspx?keyword=awensucheallemailstore என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடவும். 

2.2. புரோகிராமினை இயக்கி Archive email என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். POP3 Mailbox என்பதனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியினைத் தரவும். அடுத்து கேட்கப்பட்டுள்ள இடத்தில் பாஸ்வேர்டி னையும் அமைக்கவும். ‘Access via’ ட்ராப் டவுண் மெனுவில், POP 3SSL என அமைத்து, அடுத்து நெக்ஸ்ட் பட்டனில் கிளிக் செய்திடவும். 

2.3. அடுத்து உங்கள் விருப்பத்தினைத் தர வேண்டும். பேக் அப் செய்த பின்னர், உங்கள் மெயில் தளத்தில் உள்ள மெயில்களை அழித்துவிடவா என்று கேட்கப்படும். அழிக்காமல் வைப்பதே நல்லது. இதன் பின்னர், நீங்கள் POP3 அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இது எளிதான வேலை தான். பின்னர் உங்கள் மெயில்களை பேக் அப் செய்திடலாம். இதனை உங்கள் சிடி, டிவிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் கூட மேற்கொள்ளலாம். மெயில் ஸ்டோர், நீங்கள் உருவாக்கிய போல்டர்கள் உட்பட அனைத்தையும் பேக் அப் செய்கிறது. இங்கும் பல நிலைகளாக பேக் அப் செய்திடும் வழி தரப்படுகிறது.
இந்த புரோகிராம் குறித்து இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஜிமெயில் பேக் அப் புரோகிராமைக் காட்டிலும் வேகமாக இது செயல்படுகிறது.

3. யாஹூ மெயில்: நீங்கள் யாஹூ இலவச மெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு அதனை பேக் அப் செய்திடும் வசதியை யாஹூ தரவில்லை. பி.ஓ.பி.3 மெயில் வகை வசதியினை, கட்டணம் ( ஆண்டுக்கு 20 டாலர்) பெற்றுக் கொண்டு தான் யாஹூ தருகிறது. இருப்பினும் பேக் அப் செய்திட ஒரு வழி உள்ளது.

3.1. Zimbra Desktop என்ற புரோகிராம் இதற்கு உதவுகிறது. இதனை http://www.zimbra.com/ downloads/zddownloads.html என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். இதனை மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று மெயில் அக்கவுண்ட்களை பேக் அப் செய்திடவும் பயன்படுத்தலாம். 

3.2. Zimbra Desktop புரோகிராமைத் திறந்து கொள்ளவும். Add New Account என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Yahoo என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட் மற்றும் கேட்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவும். விரும்பினால், calendars, contacts, and group ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கலாம். 

3.3. Validate and Save என்பதில் கிளிக் செய்திடவும். Zimbra தன்னை யாஹூவுடன் இணைக்கும். இதற்குச் சற்று நேரம் ஆகலாம். இணைத்த பின்னர், Launch Desktop என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Preferences டேப் தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், Import/Export என்பதில் கிளிக் செய்திடவும்.

3.4. ‘Export’ என்பதில், Account என்பது செக் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்து, Advanced Settings பாக்ஸில் செக் செய்திடவும். இங்கு எவை எல்லாம் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறீர்களோ, அவற்றிற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். ஆனால் Mail என்ற பாக்ஸிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றை முடித்த பின்னர், Export என்பதில் கிளிக் செய்திடவும். 

3.5. பேக் அப் பைலாக, (.TGZ) என்ற துணைப் பெயருடன் உங்களுக்கு ஒரு ஸிப் செய்யப்பட்ட பைல் கிடைக்கும். இதனை விண் ஆர்.ஏ.ஆர். மூலம் திறந்து பார்க்கலாம். உங்கள் இமெயில் மெசேஜ் அனைத்தும் .EML என்ற துணைப் பெயர் கொண்ட பைலாகக் கிடைக்கும். இவற்றை அவுட்லுக், தண்டர்பேர்ட், இடோரா போன்ற எந்த ஒரு டெஸ்க் டாப் இமெயில் புரோகிராம் மூலமும் திறந்து பார்க்கலாம்.

ஸிம்ப்ரா புரோகிராம், மேலே சொன்ன இரண்டு புரோகிராம் போல இயக்குவதற்கு எளிதானதல்ல. ஆனால் பயன் அதிகம் உள்ளது.
மேலே காட்டப்பட்டுள்ள வழிகளின்படி, உங்களின் முக்கிய மெயில் மெசேஜ் களையும், இணைப்பு பைல்களையும் பேக் அப் எடுத்து சிடி, டிவிடி, எக்ஸ்ட்ரா ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரைவ் என ஏதாவது ஒன்றில் பேக் அப் பைலாக வைத்துக் கொள்ளவும்.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review