January 13, 2010

மடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்'

தொழில்நுட்ப மேம்பாட்டின் வளர்ச்சி காரணமாக தற்போதுள்ள லேப்டாப் எனப்படும் மடிக்கனிணியின் அடுத்த அவதாரம் தான் விரைவில் வெளிவரவுள்ள இந்த டேப்ளட் எனப்படும் சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள்.


பார்ப்பதற்கு ஸ்லேட் போன்றே இருப்பதால் இதை ஸ்லேட் என்று அழைத்தாலும் தவறு இல்லை. இந்த டேப்ளட்கள் விரைவில் ஆப்பிள், டெல், ஹெச்பி, மோட்டோரோலா, லெனோவா என அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்த உள்ளன.

லாஸ் வேகாசில் இந்த வாரம் நடைபெறவுள்ள புதிய நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சியில் இந்த டேப்ளட்கள் காட்சிக்கு வர உள்ளன. ஸ்மார்ட் போன்கள் எனப்படும் நவீன செல்போன்களுக்கும், லேப்டாப்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த டேப்ளட்கள் அமைந்திருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள 10 அங்குலம் அளவிலான டேப்ளட் குறித்த அறிவிப்பு இம்மாதம் 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது. செல்போன்களில் ஐபோன் ஏற்படுத்திய மாற்றத்தை கம்ப்யூட்டர்களில் இந்த டேப்ளட் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அளவை விட குறைவான அளவில் கூட டேப்ளட்கள் வந்து புரட்சியை ஏற்படுத்தப் போவதாக என்விடியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஜென் சுன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

இந்த டேப்ளட்கள் 500 டாலர் என்ற அளவில் விலை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

January 12, 2010

ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்

உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது.


இந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு “ரீனல் சிம்பதடிக் நெர்வ் அப்ளேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன.

பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகிச்சையை செய்து கொண்டுள்ளார். இவருக்கு இந்த சிகிச்சை அளிக்க ஒரு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரிட்டனில் மொத்தம் 1.5 கோடி பேர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில், பாதி பேருக்கு, தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை.

நூற்றுக்கணக்கானோர், உயர் ரத்த அழுத்தத்தால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படாமல் தடுக்க, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையும் நிலவுகிறது. அத்தகையோருக்கு இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று பிரிட்டன் டாக்டர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து, டாக்டர் மெல் லோபோ என்பவர் கூறுகையில்,
 “இது, உயர் ரத்த அழுத் தத்திற்கான சிகிச்சை முறையில், மிகச் சிறந்த வளர்ச்சி’ என்றார்.

கை அசைவில் இயங்கும் டிவி

மனிதனுக்கு அறிவு அதிகம். அதேபோல சோம்பலும். எல்லா வேலையும் இருந்த இடத்திலேயே நடக்க வேண்டும் என்று பலர் விரும்புவார்கள். இன்னும் சிலர் கை அசைத்தாலே காரியம் நடக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.

அது போல எண்ணம் உடையவர்களின் ஆசையை நிறைவேற்ற புதிய டி.வி. வருகிறது. ஆமாம், இனிமேல் டி.வி.யை இயக்க ரிமோட்டை தேட வேண்டாம். இருந்த இடத்தில் இருந்து கையை அசைத்தால்போதும் டி.வி. இயங்க ஆரம்பித்து விடும்.


அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஆரஞ்சு வேல்லி நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான டி.வி. வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த டி.வி.யில் ஒரு 3டி கேமராவும், சென்சாரும் இணைக்கப்பட்டு இருக்கும்.

டி.வி.க்கான சுவிட்சை ஆன் செய்தால்போதும். மற்றபடி எல்லா வேலைகளையும் ரிமோட் இல்லாமல் கைஅசைவிலேயே செய்யலாம். கேமராவும், சென்சாரும் உங்கள் அசைவுகளுக்கு ஏற்ப டி.வி.யை இயக்கும். விரல்களை அசைப்பதற்கு ஏற்ப சானல் மாற்றவோ, சப்தத்தை கூட்டவோ குறைக்கவோ முடியும்.

அதேபோல வீடியோ கேம்ஸ் விளையாட நினைத்தாலும் உடல்அசைவு மூலமே விளையாடலாம். '3டி சமிக்ஞை' முறையில் இயங்கும் இந்த டி.வி. தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்த டி.வி.யுடன் கொண்டாடலாம் என்று இதை தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

January 11, 2010

குறட்டையை கட்டுப்படுத்த வருகிறது புதிய கருவி

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம்.


குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும். இந்த நிலையை போக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது.

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. அப்போது, இதயத்திலிருந்து வெளியேறும் காற்று எந்த தடையும் இன்றி வெளியேறுகிறது. இதனால், குறட்டை நின்றுபோகும். இதில், பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம், நாம் படுக்கைக்கு செல்லும் போது ஆன் செய்தும், எழுந்திருக்கும் போது ஆப் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த சாதனம் தற்போது பரிசோதனையில் இருந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், தூக்கம் கெட்டு தவிக்கும் லட்சோப லட்ச மக்கள் பயன் பெறுவர்.

செயற்கை ரத்தசெல்கள் தயாரிப்பு : இந்தியர் சாதனை

உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிப்பது ரத்தம். நாம் உண்ணும் உணவு, பல மாறுதல்களுக்குப் பிறகு ரத்தமாக மாறுவது இயற்கை வினோதங்களில் உச்சமாகும்.

ஆபத்துக் காலத்தில் உயிரைத் தாங்கிப் பிடிப்பதில் ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் ரத்தப்பிரிவுகள் வேறுபடுவதால் எல்லோருக்கும் தேவையான ரத்தம் உடனடியாக கிடைப்பதில்லை. இதற்காக ரத்தத்தை உறையவைத்தல், தனித்தனி ரத்தசெல்களாக பிரிப்பது என பல வழிகளில் ரத்தத்தை பிரித்து சேமித்து பயன்படுத்துகிறோம்.


விஞ்ஞான வளர்ச்சியில் ரத்தசெல்களை வளர்த்து செயற்கையாக ரத்தம் உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது செயற்கையாகவே ரத்த செல்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த ரத்த செல்களை உருவாக்கியவர் அமெரிக்கவாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் வேதியல் பிரிவு பேராசரியராக பணியாற்றி வரும் சாமிர் மித்ராகோத்திரி என்பவர்தான் இந்த ரத்த செல்களை உருவாக்கி உள்ளார். இவர் 1992-ம் ஆண்டில் மும்பையில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் ஆவார்.

இவர் உருவாக்கி இருப்பது, ரத்த சிவப்பணுக்களாகும். இது 90 சதவீத அளவில் இயற்கை ரத்த செல்கள் போலவே செயல்படுகிறது. மிருதுவானதாகவும், நெகிழும் தன்மையுடனும் இருப்பதோடு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு ரத்தத் தேவையை நிறைவேற்றும், நோய் எதிர்ப்புத்தன்மையுடன் கூடிய ரத்தமாக உட்செலுத்தும் புதிய மருத்துவ முறையாகவும் பயன்படும் என்று தெரிகிறது.

மித்ராகோத்திரி, ஏற்கனவே சிறப்புத் தன்மை கொண்ட பாலிமரை உருவாக்கி சாதனை படைத்தவர் எனது குறிப்பிடத்தக்கது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review